சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேமுதிக திமுகவுடன் இணைந்ததன் பின்னர், அதன் கடந்தகாலக் கொள்கைகள் விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகியோர் முன்வைத்த நிலைப்பாடுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்போது, திமுக - தேமுதிக கூட்டணி குறித்து சந்தேகம் எழுகிறது. இது கொள்கைக்கான கூட்டணி அல்ல, கொள்ளையடிப்பதற்கான கூட்டணியாகவே மக்கள் பார்க்கிறார்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி லட்சிய கூட்டணி.

Advertisment

தற்போதைய திமுக ஆட்சியில், மக்களின் செலவுச் சுமை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வர திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைக்கிறது. அதற்காகவே தேமுதிகவை கூட்டணிக்குள் வளைத்துப் போட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் காமெடியாகப் பேசப்படுகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதைச் சொன்னாலும் இனி மக்கள் நம்பமாட்டார்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. வாக்காளர்களில் பெரும்பான்மையினர் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையிலேயே உள்ளனர். அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகச் சீர்கேடும், நிதிநிலைச் சிக்கலும் திமுக ஆட்சியின் செயல்திறன் குறைவால் ஏற்பட்டவை. திமுக அரசு திட்டமிட்டு பொய் சொல்லி கடன் வாங்கி, அதில் லாபம் சம்பாதிக்கும் பணியை செய்திருக்கிறது. இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழக வரலாற்றில் கண்டதில்லை என மக்கள் பேசுகின்றனர்.

Advertisment

அதிமுக - பாஜக கூட்டணி மக்கள் நலன் மற்றும் தேசிய நலனை முன்னிறுத்தும் கூட்டணி. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததையடுத்து, அக்கட்சியின் சில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேமுதிக உருவாக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளிலிருந்து அது விலகியுள்ளது என்ற அதிருப்தி அக்கட்சியின் நிர்வாகிகளிடமும் அடிமட்டத் தொண்டர்களிடமும் காணப்படுகிறது. திமுக–தேமுதிக கூட்டணியின் வெற்றி பூஜ்ஜியத்தில்தான் முடியும். திமுகவை எதிர்த்து உருவான அதிமுக, தனது அடிப்படை நிலைப்பாட்டைத் தொடர்கிறது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடுகளுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள். த.வெ.க.வை யாரும் கண்டுகொள்வதில்லை. களநிலவரத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளே பிரதான போட்டியாளர்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியும், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் நேரடியாக மோதும். பரிதாப நிலையில் இருக்கும் த.வெ.க. இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும். தனித்து நின்று 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற மாணிக்கம் தாகூர் போன்றோரின் கருத்துகளுக்கு அதிமுக தனியாக பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலையும் பலவீனமாகவே உள்ளது.

திமுக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றம் முக்கியக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை வலியுறுத்தியும் வழக்குப் பதிவு தொடர்பாக நடவடிக்கை எடுக்காத நிலையில், உயர் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. சம்பந்தமில்லாத விவகாரங்களில் விரைவாக வழக்குகள் பதிவு செய்யும் திமுக அரசு, நீதிமன்றம் மற்றும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டிய விஷயங்களில் தாமதம் காட்டுவது ஏன்? திமுக அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு த.வெ.க. ஒன்றும் பெரிய கட்சி இல்லை. திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் தான் போட்டி என்று லூசுத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிற்கு நேரடியான போட்டி திமுகவுடனே உள்ளது. அதிமுக ஒரு வலுவான அரசியல் இயக்கமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுகிறது. அதிமுகவை எதிர்த்து களத்தில் நிற்பது திமுக மட்டுமே; த.வெ.க. களத்திலேயே இல்லை” என்றார். 

Advertisment