Rajendra Balaji criticized Mk stalin announced magalir urimai thogai
கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக, திமுக அரசைக் கண்டித்து, சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திரபாலாஜி, “மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்து வருகிறார். தற்போது அவரே ஆட்சியில் இருக்கும் நிலையில், அதை இப்போதே வழங்க வேண்டாமா? இனிமேல் ஆட்சிக்கு வந்து வழங்குவதாகச் சொல்வது கதை அளப்பதற்குச் சமம். ஒட்டுமொத்த கஜானாவையும் காலி செய்து தமிழக மக்களுக்கு திமுக எவ்வளவு பணம் வழங்கினாலும், மக்கள் திமுகவுக்கு பட்டை நாமமே கொடுப்பார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 100 நாள் முறையாக வேலை வழங்கப்பட்டு, வாரந்தோறும் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு மாதம் கூட வேலை வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு இந்த திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ள நிலையில், பாஜகவும் அதிமுகவும் திட்டத்தை முடக்கப் பார்க்கின்றன என திமுக பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. ஆட்சியில் இல்லாத அதிமுகவை எதிர்த்து, திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெட்கமின்றி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மக்களை ஏமாற்ற திட்டமிட்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி, வாரம் ஒருமுறை வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலால் மு.க. ஸ்டாலின் எங்கள் மீது புழுதி வாரி தூற்றுகிறார்.
உலக வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் இருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள திமுக அரசு, தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் முறையாகச் செய்யவில்லை. ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் இவ்வளவு கடன் வாங்கி என்ன செய்தார்கள் என்பதே தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க துடிக்கும் திமுகவுக்கு, இந்த தேர்தல் சரியான பாடம் புகட்டும் தேர்தலாக அமையும். கோடைகாலத் தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு, மக்களை ஏமாற்றுவதாகும். இல்லாத திட்டங்களை அறிவித்து வருகிறார். முதல்வர் அறிவிக்கும் மற்றும் தொடங்கி வைக்கும் எந்த திட்டத்திற்கும் நிதி ஆதாரம் இல்லை. கஜானாவில் பணம் இல்லாமலேயே திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை ஏமாற்ற முயற்சி நடக்கிறது. தமிழக மக்களை ஏமாற்ற மு.க. ஸ்டாலின் தயாராகிவிட்டார், அவரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் திமுக வீட்டுக்கு போகிறது, அதிமுக கோட்டைக்கு போகிறது” என்றார்.
Follow Us