சிவகாசி வடக்கு ஒன்றிய அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது, “விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி வடக்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு வாகன வசதிகளை நாம் செய்துகொடுக்காமல் விட்டதால் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமால் போனது. தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் தோல்விக்கு இதுதான் காரணம். 7ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தால் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பார். அப்போது நாம் வெற்றியை கோட்டைவிட்டுட்டோம்.
வெற்றியை எங்கு தவறவிட்டோமெனக் கண்காணித்தபோது, என் கண்ணுக்கு பளிச்சென்று தெரிந்தது, சிவகாசி வடக்கு ஒன்றியத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய 7 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமல் போனதுதான். 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்ற மமதையில் இருந்துவிட்டோம். அதுபோல், எப்போதும் இருக்க கூடாதென்பது, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு கற்றுத் தந்துள்ள ஒரு படிப்பினை. நாம் மிகவும் கவனமாக இருந்திருந்தால், தம்பி விஜயபிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பார், அவரை டெல்லிக்கு அனுப்பிவைத்த பெருமையையும் நாம் பெற்றிருப்போம். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். அதிமுகவில் பிரச்சனை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளாக, கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டு தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்தால் எவ்வளவுதான் மனிதன் தாக்குப்பிடிக்க முடியும்? தொடர்ந்து கட்சிக்கு நெருக்கடி கொடுத்தவர்களை மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
அதிமுக இயக்கத்தை அழிக்க நினைத்து, தலைமைக்கு சவால் விடுபவர்களோடு கூட்டு சேர்ந்துகொண்டு இயக்கத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுவதாக சொன்னால் யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்? கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தவறு செய்தது போல் பொய்யான வதந்தியை பரப்பப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்கும் தளபதிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர, காட்டிக்கொடுக்கும் பணியைச் செய்தால் தலைமை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கும்? அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்களிடம் கேட்டுத்தான் எடப்பாடிபழனிச்சாமி முடிவெடுக்கிறார்.” என்றார்.
Follow Us