ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று.. 57 பயணிகளுடன் ஜோத்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தானது.. ஜெய்சால்மரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தையாத் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பக்கத்திலிருந்து புகை வருவதை பயணிகள் கவனித்துள்ளனர்.
அப்போது, என்ன செய்வது என தெரியாமல் யூகிப்பதற்குள்.. அடுத்த ஒரு சில நிமிடங்களில் மளமளவென தீப்பற்றியதில் பேருந்து முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக தப்பிக்க முயன்றனர். மேலும், அந்த வழியாக சென்ற பயணிகளும், கிராம மக்களும் விரைந்து வந்து தண்ணீர் மற்றும் மணலை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றனர். அப்போது, தீயின் உஷ்ணம் அதிகமாக இருந்ததால்.. உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அருகிலிருந்த ஜவஹர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு அனுப்பி வைத்தனர். நொடியில் அரங்கேறிய இந்த விபத்து சம்பவத்தில்..
தீவிபத்து ஏற்பட்ட இடத்திலேயே 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்த நிலையில் படுகாயமடைந்த 16 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.. ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சேதமடைந்த பேருந்தை ஆய்வு செய்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 5 நாட்களுக்கு முன்னர் தான் இந்த பேருந்து புதிதாக வாங்கப்பட்டதாகவும், பேருந்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தான் விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெய்சால்மர் தீ விபத்து சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.