தாடியை அடையாளம் காட்டி இஸ்லாமிய ஆசிரியரை ‘வந்தே மாதரம்’ கூறும்படி பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் வற்புறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள ஹவா மஹால் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏவாக பால்முகுந்த் ஆச்சார்யா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் கல்வியாளர்களை கெளரவிக்கும் நோக்கத்தில் மாநில அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 100 ஆசிரியர்கள் உள்பட நாடு தழுவிய பள்ளிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ஜ.க எம்.எல்.ஏ பால்முகுந்த் ஆச்சார்யா பேசினார். அப்போது அவர், ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டு அந்த முழக்கத்தை அங்கிருந்தவர்களும் கூறும்படி கூறியுள்ளார். அதன்படி, பால்முகுந்த் ஆச்சார்யா முழக்கமிட அங்கிருந்தவர்களும் சேர்ந்து முழக்கமிட்டனர். ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆசிரியர் அன்சாரி முகமது ரஷீத் முழக்கமிடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவரது தாடியை அடையாளம் காட்டி பால்முகுந்த் ஆச்சார்யா, ‘நீங்கள் ஏன் வந்தே மாதரம் சொல்லவில்லை?. வந்தே மாதரம் சொல்லுங்கள்’ எனக் கூறும்படி வற்புறுத்தினார்.
மேலும் அவர், “நீங்கள் வெளியில் இருந்து வந்தீர்களா?. நீங்கள் நமது நாட்டைச் சேர்ந்தவர் இல்லையா?. நீங்கள் இந்த நாட்டில் இருந்து சாப்பிடுகிறீர்கள், ஆனால் நீங்கள் அதற்கு விசுவாசமாக இல்லை” என்று கூறினார். அதனை தொடர்ந்து மேடையில் இருந்த மற்றவர்களிடம், “அவர் இந்த நாட்டில் வசிக்கிறார். ஆனால் வந்தே மாதரம் சொல்லவில்லை. அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்?. அவர் இந்தியாவையோ அல்லது மூவர்ணக் கொடியையோ நம்பவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முகமது ரஷீத், ‘எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். நான் மகாராஷ்டிராவில் இருந்து வந்திருக்கிறேன். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று கூறினார். அதனை தொடர்ந்து மேடையில் இருந்து கீழே இறங்கி அந்த ஆசிரியரிடம் பால்முகுந்த் ஆச்சார்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து கிளம்பினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.