இந்தி மொழிக்கு எதிரான குரல் நாளுக்கு நாள் மகாராஷ்டிராவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்தது. இதனிடையே, மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக, மராத்தி பேசாதவர்கள் மீது நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குவது, அடிப்பது போன்ற பல வழக்குகள் பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி மராத்தி பேசாததால் பயந்தர் பகுதி இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மொழி தொடர்பான சர்ச்சை அம்மாநிலத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், மதரஸாக்களில் உருது மொழிக்குப் பதிலாக மராத்தி மொழியைக் கற்பிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறினார். இது பெரும் சர்ச்சையானது.

இந்த சூழ்நிலையில், விபத்து கோரிக்கையைத் தீர்ப்பதற்காக மராத்தியில் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை இந்தியில் மொழி பெயர்த்து தருமாறு நாக்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கி கோரியதாகக் கூறப்படுகிறது. இதனால், நவநிர்மாண் சேனா கட்சியினர் வங்கிக் கிளைக்கு வெளியே கூடி, வங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் கலவரத்தை ஏற்படுத்தியதாகக் கூறி பல நவநிர்மாண் சேனா கட்சியினர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், மராத்தி மொழி குறித்து எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு மார்வாடி கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். விக்ரோலி சந்தையில் உள்ள லக்கி மெடிக்கல் கடையில் பணிபுரியும் பிரேம்சிங் தேவ்தா, தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் மராத்தி மொழிக்கு எதிரான கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நவநிர்மாண் சேனா தலைவர் விஸ்வஜீத் தோலம் தலைமையிலான தொண்டர்கள் பலர், அந்த கடைக்குள் நுழைந்து பிரேம்சிங் தேவ்தாவை தாக்கியுள்ளனர். மேலும் அவரை திட்டி மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தியுள்ளனர். அதனால் தேவ்தா கண்ணீரோடு மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், அவரை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மீண்டும் தனது செயல்களுக்கு மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.