மத்திய அரசு கொண்டு தேசிய கல்வி கொள்கை மூலம் வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவில் இந்தியை மொழி திணிப்பதாகக் கூறி அந்த நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, 1ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக இருப்பதற்கு பதிலாக விருப்பமான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் படிக்க விருப்பம் தெரிவித்தால் அவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநில அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
இந்தி மொழியை ஆதரிக்கும் தேசிய கல்வி கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, அதன் பின்னர் அதே இந்தி மொழியை மறைமுகமாக மாணவர்களுக்கு திணிப்பதாக கூறி மராத்தி அமைப்புகள் உள்பட எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக வரும் ஜூலை 7ஆம் தேதி இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் அறிவித்தனர். சிவசேனா கட்சியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நவநிர்மாண் சேனா கட்சியை ஆரம்பித்த உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகனான ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்திருந்தது அம்மாநில அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பு வந்ததால், மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்படாது என்று கூறி தனது இரண்டு முடிவுகளிலும் இருந்து மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது.
இந்த நிலையில், சகோதர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே அறிவித்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டம் இன்று (05-07-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். இதில் பேசிய ராஜ் தாக்கரே, “ஒரு குஜராத்தியாக இருந்தாலும் சரி, இங்குள்ள வேறு யாராக இருந்தாலும் சரி, மராத்தி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக மராத்தி பேசத் தெரியாதவர்களை அடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் மராத்தி தெரியாது என்று யாராவது நாடகம் ஆடினால், அவர்களின் காதுகளுக்குக் கீழே அடிக்க வேண்டும். நீங்கள் ஒருவரை அடித்தால், அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். அடிக்கப்பட்ட நபர் தான் அடிக்கப்பட்டதாகச் சொல்லட்டும்; எல்லோரிடமும் சொல்லத் தேவையில்லை” என்று கூறினார்.
கடந்த ஜூன் 28ஆம் தேதி மராத்தி பேசாததால் இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தாக்குதல் நடத்திய நவநிர்மாண் சேனா கட்சியினர் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.