தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நேர்வில், 31, அக்டோபர் 2025 வரை ஆளுநர் மாளிகையால் பெறப்பட்ட மசோதாக்களில், 81% மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன (இவற்றில் 95% மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது). 13% மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன (இவற்றில் 60% மசோதாக்கள் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன). மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர், 2025இன் இறுதி வாரத்தில் பெறப்பட்டு பரிலேனையில் உள்ளன.
மேற்கண்ட விவரங்கள், சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் கூறப்படும் தவறான குற்றச்சாட்டுகளை மறுத்து உண்மைத்தன்மையை நிரூபிக்கின்றன. மேலும் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, சட்டப்பேரவையால் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்கள், ஆளுநர் ஆர்.என். ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு, மீள சமர்ப்பிக்கப்பட்டபோது, அவை நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிகளுக்கு முரணாக இருந்ததாலும், அவை மாநில சட்டமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்டதாலும், ஆளுநர் ஆர்.என். ரவி அந்த மசோதாக்களை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆய்வு செய்துள்ளார்ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்குவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, மாநில மக்களின் நலன்களைக் காப்பதிலும், உண்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டுள்ளார். மேலும், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற நேர்மையுடனும், உரியகவனத்துடனும் செயல்பட்டு, தனது அரசிலமைப்புக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி அனைத்துச் சட்டங்களும், அரசியலமைப்பிற்கு உட்பட்டு இயற்றப்படுவதை உறுதி செய்கிறார்.
ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்களின் மீது மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளார். மேலும், தமிழர் பாரம்பரியம், கலை மற்றும் இலக்கியத்தை முன்னிலைப்படுத்தும் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழி சார்ந்த முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறார். இது தமிழர் பண்பாட்டின் மீது ஆளுநர் ஆர்.என். ரவியின் ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது .ஆளுநர் ஆர்.என். ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்களின் நலனுக்காக தடர்ந்து பணியாற்றி வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/raj-bhavan-rn-ravi-2025-11-08-08-23-39.jpg)