தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. கனமழை பெய்து வரும் அதே நேரத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. வீட்டில் உள்ள சோஃபா உள்ளிட்ட பொருட்கள் பலர் வீடுகளில் சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இன்று (22/10/2025) மாலை 4:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் 17.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.