திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வாணியம்பாடியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பாமல், மழை வெள்ளத்தைப் பயன்படுத்தி, இரவு நேரங்களில் பாலாற்றில் மழை வெள்ளநீருடன் கழிவுநீரைத் திறந்து விடுவதாகக் கூறப்படுகிறது.இதனால், ஆற்று நீர் முழுவதும் 10 அடி உயரத்திற்கு நுரை படர்ந்து, ஆற்று நீர் முழுவதும் கருப்பு நிறத்திற்கு மாறி, துர்நாற்றம் வீசுகிறது.
பாலாறு மாசடைந்து வருவதைத் தொடர்ந்து, வெளியாகி வரும் செய்திகள் வழியாக அறிந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, பாலாறு குறித்து உரிய விளக்க அறிக்கை அளிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போதெல்லாம், பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதால், நுரை தோன்றி, நிறம் மாறி நீர் செல்லும் என்பதும், இது குறித்து மக்கள் போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் முறையிட்டும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள பாலாற்று நீரை கால்நடைகள் கூட பருகுவதில்லை என்றும், தொடர்ந்து இதேபோல் கழிவுநீர் கலக்க விடப்பட்டால், வருங்கால சந்ததிக்கு பாலாறு என்ற ஆறு இல்லாமல் போய்விடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.