தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

15ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. கடல் பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக  நாகை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாகையில் நேற்றில் இருந்தே அவ்வப்போது மிதமான மழையும் கனமழையும் விட்டுவிட்டு பொழிந்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வந்த நிலையில் இன்று (17/11/2025) நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதேபோல் காரைக்கால் மாவட்டத்திலும் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (17/11/2025) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.