தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை மூலம் 14 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இது இயல்பு மழைப்பொழிவை விட 58 சதவீதம் அதிகம். இயல்பை விட திருநெல்வேலி மாவட்டத்தில் 254 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. தமிழகத்தில் நான்கு இடங்களில் மிக கனமழையும், 17 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
தெற்கு கேரளா, குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுகிறது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. வரும் அக்டோபர் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடலில் மண்டலமாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும்.
அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நாளை தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். அக்டோபர் 21ம் தேதி காலைக்குள் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்றே கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.