Rain alert for three districts - Storm warning cage hoisted in Pamban Photograph: (rain)
தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கோவை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மடக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.