தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 15.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கத்தில் 8.7 சென்டிமீட்டர் மழையும், சாத்தனூரில் 7.8 சென்டிமீட்டர் மழையும், வானாபுரத்தில் 7.9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாணியம்பாடி பெரியபேட்டை ஆற்றுப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் செட்டியப்பனூர் தரைப்பாலம் நீரில் நீரில் மூழ்கியுள்ளது.