மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா பகுதியில் அசுத்தமான குடிநீர் பருகியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் இறந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், 200 க்கும் மேற்பட்டோர் 27 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சாக்கடை நீர் கலந்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மரணங்களின் எண்ணிக்கை 14 வரைக்கும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

Advertisment

இது குறித்து அம்மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று 8வது முறையாக விருது பெற்றுள்ளது இந்தூர் நகரம்.  இந்த நிலையில் அசுத்தமான தண்ணீரைக் குடித்து பொதுமக்கள் உயிரிழந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உண்மையிலேயே இந்தூர் சுத்தமான நகரமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்கத் தவறிய பொறியாளர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.   

Advertisment

மேலும் இப்பிரச்னை குறித்து அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பத்திரிகையாளர்களுக்கு  பதிலளித்த போது, செய்தியாளர் ஒருவர் "சம்பவத்திற்கு ஏன் கீழ்மட்ட  அதிகாரிகளை மட்டும் குறை சொல்கிறீர்கள், மேல் மட்டத் தலைவர்களை பற்றி இதில் விவாதிப்பதில்லை' என்று கேட்டார். இதனால் கோபமடைந்த அமைச்சர் கைலாஷ், ''அதை விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்'' என்று எரிச்சலுடன் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு வைரலானதைத் தொடர்ந்து, தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். 

indore-water-issue-file-image

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தூரில் வழங்கப்பட்டது குடி நீர் அல்ல, அது விஷம். வீடுதோறும் மரண ஓலங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. செய்வதறியாது ஏழைகள் கையறு நிலையில் உள்ளனர். இந்த நிலையில் பாஜக தலைவர்களின் அகங்கார பேச்சுக்கள் இன்னும் அவர்களை சோகத்தில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதலை, வேண்டி நிற்கும் போது, அரசாங்கம் அவர்களிடம் தங்களின் கர்வத்தை காட்டுகிறது. குடிநீரில் துர்நாற்றம் வீசுவது குறித்து மக்கள் பல முறை புகாரளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

Advertisment

குடிநீரில் கழிவுநீர் கலந்தது எப்படி?. இந்த பிரச்னை ஏற்பட்ட நிலையில் குடிநீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை?. இந்த தவறுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. இந்த கேள்விகள் வெறும் கேள்விகள் அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்று நடக்க வேண்டும் என்பதற்கான கோரிக்கை.  சுத்தமான குடி நீர் என்பது சலுகையல்ல. அது மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமை. மக்களின் இந்த அடிப்படை உரிமைகளை படுகொலை செய்யப்பட்டதற்கு, பாஜக  'டபுள் என்ஜின்' அரசின் அலட்சியமான நிர்வாகம் மற்றும் உணர்வற்ற தலைமையே முழு பொறுப்பு. 

modi-ani-mic

மத்தியப் பிரதேசம் இப்போது தவறான நிர்வாகத்தின் மையப்புள்ளியாக மாறிவிட்டது . ஒருபுறம் இருமல் மருந்தால் இறப்புகள், மறுபுறம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் எலிகள். இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடித்து ஏற்படும் மரணங்கள். இவ்வாறாக ஒவ்வொரு முறையும் ஏழைகள் இறக்கும் போது, பிரதமர் மோடி எப்போதும் போலவே மௌனமாகவே இருக்கிறார்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.