'Rahul is reenacting the same old drama' - Election Commission responds to vote rigging allegations Photograph: (election commission)
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும், கர்நாடகா தேர்தலிலும் பா.ஜ.கவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் மிகப்பெரிய முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வருகிறது.
நாட்டில் எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்ற தரவுகளை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ராகுல் காந்தி நேற்று (07-08-25) வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் பெரும் திருட்டு நடந்துள்ளது. மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமாக வாக்கு திருட்டு நடந்துள்ளது. காங்கிரஸ் நடத்திய ஆய்வில் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள், செல்லாத முகவரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது பெரும்பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் முன்னிலை வகித்தார். ஆனால், இறுதி முடிவுகளில் பா.ஜ.க வேட்பாளர் பிசி மோகன் 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். காங்கிரஸ் 6,26,208 வாக்குகளையும், பா.ஜ.க 6,58,915 வாக்குகளையும் பெற்றது. 7 தொகுதிகளில் 6 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் மகாதேவபுரா தொகுதியில் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். 33,692 வாக்காளர்கள் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 ஐ தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
ஒரே நபர், ஒரு தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதுபோல ஆயிரக்கணக்கில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 40,000க்கும் அதிகமாக போலி முகவரிகள் உள்ளது. ஒரே நபருக்கு பல மாநிலங்களில் வாக்கு உள்ளன. போலி வாக்காளர்கள், செல்லாத முகவரிகள், ஒரே முகவரியில் மொத்த வாக்காளர்கள் போன்ற வழிகளில் வாக்குகள் திருடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நாங்கள் சென்றபோது அங்கு வசிக்கும் மக்களின் பதிவு எதுவும் இல்லை. அந்த வீட்டில் வேறொரு குடும்பம் வசிக்கிறது” என்று கூறி ஆதாரங்களோடு தரவுகளை வெளியிட்டார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளது. 'பழைய நாடகத்தையே மீண்டும் ராகுல் காந்தி அரங்கேற்றுகிறார். 2018 ல் தனியார் இணையத்தில் இருந்து எடுத்த ஆவணத்தை கொண்டு தவறாக வழிநடத்து முயன்றனர். கடந்த 2018 கமல்நாத் குற்றச்சாட்டு கூறி திசைத் திருப்ப முயற்சித்த ராகுல் காந்தி, தற்போது மீண்டும் அதே மாதிரியான குற்றச்சாட்டை கூறுகிறார். அந்த தவறுகள் நான்கு மாதங்களுக்கு முன்பே களையப்பட்டு காங்கிரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.