பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான சான்றுகளை நேற்று (07-08-25) ராகுல் காந்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் பெரும் திருட்டு நடந்துள்ளது. மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமாக வாக்கு திருட்டு நடந்துள்ளது. காங்கிரஸ் நடத்திய ஆய்வில் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள், செல்லாத முகவரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டது. 7தொகுதிகளில் 6 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் மகாதேவபுரா தொகுதியில் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். 33,692 வாக்காளர்கள் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6ஐ தவறாக பயன்படுத்தியுள்ளனர்” என்று கூறி ஆதாரங்களோடு தரவுகளை வெளியிட்டார். மேலும் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 25 மக்களவைத் தொகுதிகளால் மட்டுமே பிரதமர் மோடி அந்த பதவியில் இருக்கிறார் என்றும், இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி பகிர்ந்த வாக்காளர் பட்டியலின் விளக்கக்காட்சியில், ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6இன் தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “உத்தரகாண்டில் நாங்கள் தேர்தலில் தோற்றது எனக்கு நினைவிருக்கிறது. பின்னர், வேட்பாளரிடம் ரோடு ஷோ நடைபெற்ற இடத்திற்குச் சென்று நமக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதைப் பார்க்கச் சொன்னேன். ரோடு ஷோவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். வாக்குச் சாவடியில் யாரும் வாக்களிக்கவில்லை. இது சாத்தியமற்றது. இது நடக்க முடியாது. அதன் பிறகு, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ஏதோ இதில் இருப்பதாக நாங்கள் சந்தேகமடைந்தோம். 2018 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச தேர்தல்கள் நடத்தப்பட்டன. நாங்கள் வெற்றி பெற்றோம், ஆனால் எங்கள் அரசாங்கம் திருடப்பட்டது. 2023 இல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் பார்த்தேன். பயங்கரமான ஆட்சி எதிர்ப்பு இருந்தது. ஆனால், எங்களுக்கு 65 இடங்கள் கிடைத்தன. சாத்தியமற்றது. இது நடக்காது. பின்னர், முதல் முறையாக மகாராஷ்டிராவில் எங்களுக்கு ஆதாரம் கிடைத்தது.
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த முழு விசாரணையிலும் நான் உங்களுக்கு இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன், நான் சொல்ல விரும்புகிறேன். தேர்தல் ஆணையமும் தேர்தல் அதிகாரிகளும் நீங்கள் என்ன தவறு செய்கிறீர்கள் என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். தேசத்துரோகம் நாட்டிற்கு எதிரானது. நேரம் வரும் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் உங்களைப் பிடிப்போம், காப்பாற்றப்படக்கூடாது. குற்றவாளிகளே கேட்டுக்கொள்ளுங்கள், காலம் மாறும் போது தண்டனை நிச்சயம் கிடைக்கும். வாக்குகளை திருடுவது வெறும் முறைகேடு மட்டுமல்ல, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். வாக்காளர் திருட்டை அம்பலப்படுத்துவது மிகவும் முக்கியம்” என்று கூறினார்.