கடந்தாண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.கவுடன் சேர்ந்த தேர்தல் ஆணையம் மிகப்பெரிய முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வருகிறது.

இதனிடையே, நேற்று (01-08-25) நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு நடந்ததற்காக 100 சதவீதம் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஆதாரங்களை வெளியிடும்போது இந்த நாட்டில் தேர்தல் ஆணையம் இல்லாமல் போய்விடும் என்று அவர் பேசியிருந்தார். மேலும் அவர், “தேர்தல் ஆணையம் உதவாததால் வாக்குத் திருட்டு குறித்து நாங்கள் ஆழமாக விசாரணை நடத்தினோம். நாங்கள் கண்டுபிடித்தது ஒரு அணுகுண்டு. அது வெடிக்கும்போது, இந்தியாவில் தேர்தல் ஆணையத்தைப் பார்க்க முடியாது” என்று கூறினார். இவருடைய பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு இன்று (02-08-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “ஒரு மக்களவைத் தேர்தலில் எப்படி மோசடி செய்ய முடியும்? என்பதையும் எப்படி மோசடி செய்யப்பட்டது? என்பதையும் நில நாட்களில் நாங்கள் உங்களுக்கு நிரூபிக்க போகிறோம். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை என்பது ஏற்கெனவே செத்துவிட்டது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்திய பிரதமர் இருக்கிறார். 15 இடங்களில் மோசடி செய்யப்பட்டிருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.

நான் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த போது என்னை மிரட்டுவதற்காக அருண் ஜெட்லி என்னிடம் அனுப்பப்பட்டார். நீங்கள் அரசாங்கத்தை எதிர்த்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடினால் நாங்கள் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரைப் பார்த்து, நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன் என்று கூறினேன்” எனப் பேசினார்.