பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என மொத்தம் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆதாரங்களை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருப்பினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி நடத்தி வருகிறார். கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த பேரணி பீகார் மாநிலம் முழுவதும் சுமார் 1,300 கி.மீ வரை என மொத்தம் 16 நாட்கள் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், பீகாரின் நவாடாவில் மூன்றாம் நாளான இன்று (19-08-25) காலை ராகுல் காந்தி தலைமையில்‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடைபெற்றது. திறந்தவெளி காரில் ராகுல் காந்தி நின்றபடியே மக்களை நோக்கி கை அசைத்தவாறு நெரிசலான தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கார், பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த காவலரின் கால்கள் மீது ஏறியது. இதில் அந்த காவலர் காயமடைந்தார். உடனடியாக சக காவலர்களும், தொண்டர்களும் வாகனத்தை பின்னோக்கி தள்ளி காவலரை மீட்டார். காரின் சக்கரங்களுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட பிறகு காவலர் நடந்தார். அதனை தொடர்ந்து திறந்தவெளி காரில் நின்று கொண்டிருந்த ராகுல் காந்தி, உடனடியாக ஒரு தண்ணீர் பாட்டியலை எடுத்து காயமடைந்த காவலருக்கு உதவ தனது ஆதரவாளர்களிடம் கொடுத்தார். அதன் பின்னர், அவர் காவலரைச் சந்தித்து அவரது காயம் குறித்து விசாரித்தார். ராகுல் காந்தியின் கார் காவலர் ஒருவர் மோதியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.