Rahul Gandhi's accusation There is 100% evidence that the Election Commission was involved in vote rigging
மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நவம்பரின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பா.ஜ.க மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சில தினங்களுக்கு முன்பு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும், யாராவது தவறான தகவல்களைப் பரப்பினால் அது சட்டத்தை அவமதிப்பது என்வும் தெரிவித்திருந்தது. ஆணையத்தின் எதிர்வினைக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும், மகாராஷ்டிராவின் வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இருப்பினும், அனைத்து தேர்தலும் சட்டவிதிகளின்படி தான் நடத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் பதிலளித்து. ஆனாலும், மகாராஷ்டிரா தேர்தலைப் போல வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்கு திருட்டு நடத்த இருப்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.
இதனிடையே, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளதாக ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “அவர்கள் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏமாற்றியுள்ளனர். வாக்காளர் பட்டியலைக் காட்டுமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். சிசிடிவி ஆதாரத்தை காட்டுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம், ஆனால் அவர்கள் வீடியோகிராஃபி விதிகளை மாற்றினர். மகாராஷ்டிராவில் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில், நாங்கள் ஒரு பெரிய திருட்டைப் பிடித்துள்ளோம். திருட்டு எப்படி நடக்கிறது என்பதை நான் தேர்தல் ஆணையத்திடம் கருப்பு வெள்ளையில் காண்பிப்பேன். அவர்களின் விளையாட்டு இப்போது எங்களுக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இப்போது, அவர்கள் செய்வது என்னவென்றால், அவர்கள் வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள். மேலும் ஒரு புதிய வாக்காளர் பட்டியல் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்.
இந்த நிலையில், வாக்கு திருட்டு நடந்ததற்கான 100 சதவீதம் ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “வாக்குகள் திருடப்படுகின்றன. தேர்தல் ஆணையம் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான முழு ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. இதை நான் லேசாக சொல்லவில்லை, 100 சதவீத ஆதாரத்துடன் நான் பேசுகிறேன். ஆதாரங்களை நாங்கள் வெளியிடும் போது, வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்பதை ஒட்டுமொத்த நாடும் தெரிந்துகொள்ளும். அவர்கள் அதை யாருக்காகச் செய்கிறார்கள்? அவர்கள் அதை பா.ஜ.கவுக்காகச் செய்கிறார்கள். வாக்காளர் திருட்டு குறித்து எங்களிடம் சந்தேகம் இருந்தது, அதன் நுணுக்கத்தை ஆராய்ந்தோம். இன்றுவரை தேர்தல் ஆணையம் விசாரணையில் உதவி செய்யாததால், நாங்கள் அதை சொந்தமாகச் செய்தோம். அதற்கு 6 மாதங்கள் ஆனது. தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியதில் எங்களுக்கு ஒரு அணுகுண்டு கிடைத்தது. அந்த அணுகுண்டு வெடிக்கும் போது நீங்கள் இந்த நாட்டில் தேர்தல் ஆணையத்தை பார்க்க மாட்டீர்கள்” என்று கூறினார்.