Advertisment

“உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” - 3 உயர் தேர்தல் அதிகாரிகளை எச்சரித்த ராகுல் காந்தி!

rahulga

Rahul gandhi Mp

பா.ஜ.கவுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

Advertisment

குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என மொத்தம் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆதாரங்களை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருப்பினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த 17ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். அதில் அவர், “ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் பெறப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்” என்று கூறினார்.

இதனிடையே, வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி நடத்தி வருகிறார். கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த பேரணி பீகார் மாநிலம் முழுவதும் சுமார் 1,300 கி.மீ வரை என மொத்தம் 16 நாட்கள் நடத்தப்படவுள்ளது. அவுரங்காபாத்தில் இரண்டாம் நாளாக நேற்று (18-08-25) ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்த பேரணியில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இதனையடுத்து இந்த பேரணி நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, 3 தேர்தல் ஆணையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது, “தேர்தல் ஆணையத்திடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், முழு நாடும் உங்களிடம் ஒரு பிரமாணப் பத்திரம் கேட்கும். எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் திருட்டை நாங்கள் கண்டுபிடித்து மக்கள் முன் வைப்போம். சிறப்புத் தொகுப்பு பற்றி பிரதமர் மோடி பேசுவது போல், தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற சிறப்புத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது. இதன் பொருள் வாக்குத் திருட்டின் புதிய வடிவம். பீகாரில் வாக்குத் திருட்டு செய்ய முடியாது என பீகார் மக்கள் தேர்தல் ஆணையர்களுக்கும் பா.ஜ.க தலைவர்களுக்கும் ஒரே குரலில் கூறுவார்கள்.

நான் என்ன சொன்னாலும் அதைச் செய்கிறேன். நான் மேடையில் இருந்து பொய் சொல்ல மாட்டேன் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இந்த மூன்று தேர்தல் ஆணையர்களும், பாஜக உறுப்பினர் பதவியை எடுத்துக்கொண்டு அவர்களுக்காக வேலை செய்கிறீர்கள். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், ஒரு நாள் பீகாரிலும் டெல்லியிலும் இந்தியா கூட்டணி அரசாங்கம் அமையும். பின்னர் உங்கள் மூவர் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் முழு நாட்டிலிருந்தும் வாக்குகளைத் திருடிவிட்டீர்கள்” என்று கூறினார். ராகுல் காந்தி விமர்சித்த மூன்று தேர்தல் ஆணையர்கள்,  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் என்று கூறப்படுகிறது. 

Bihar election commission election commissioner Rahul gandhi Vote adhikar yatra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe