பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான சான்றுகளை கடந்த 7ஆம் தேதி ராகுல் காந்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். மேலும் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 25 மக்களவைத் தொகுதிகளால் மட்டுமே பிரதமர் மோடி அந்த பதவியில் இருக்கிறார் என்றும், இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி பகிர்ந்த வாக்காளர் பட்டியலின் விளக்கக்காட்சியில், ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6இன் தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும்,அந்த குற்றச்சாட்டுகளை உண்மை என்று அவர் நம்பினால் பிராமணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார் தொடர்பாக  இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பிக்களுடன் நாளை (10-08-25) நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாகச் சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கூறி பிரத்யேக வலைத்தளத்தை காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “வாக்கு திருட்டு என்பது  ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற அடிப்படை ஜனநாயகக் கொள்கையின் மீதான தாக்குதல். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சுத்தமான வாக்காளர் பட்டியல் அவசியம். தேர்தல் ஆணையத்திடமிருந்து எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது - வெளிப்படைத்தன்மையைக் காட்டுங்கள் மற்றும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலைப் பொதுவில் வெளியிடுங்கள், இதனால் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் அதைத் தாங்களாகவே தணிக்கை செய்யலாம். இந்தக் கோரிக்கையை ஆதரிப்பதில் எங்களுடன் சேருங்கள் - http://votechori.in/ecdemand ஐப் பார்வையிடவும் அல்லது 9650003420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். இந்தப் போராட்டம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதனிடையே, வாக்கு திருட்டு புகார் தொடர்பாக ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘ஷகுன் ராணி என்பவர் இருமுறை வாக்களித்ததாக ராகுல் காந்தி காண்பித்த ஆவணம் எங்களுடையது அல்ல. அவர் காண்பித்த டிக் செய்யப்பட்ட ஆவணம் தேர்தல் அலுவலர் கொடுத்தது அல்ல். எனவே, குற்றச்சாட்டுகள் வைத்தபோது காண்பித்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.