Rahul gandhi to begin "vote adhikar yatra' in bihar with Tejashwi yadav
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வந்தது.
இதனிடையே, பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான தரவுகளை ஆதாரங்களோடு ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டி வருகிறார்.
அதே வேளையில் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும்,அந்த குற்றச்சாட்டுகளை உண்மை என்று அவர் நம்பினால் பிராமணத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகார் 16 நாட்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் சுமார் 1,300 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த பேரணியை ராகுல் காந்தி நேற்று (17-08-25) பீகாரின் ரோஹ்தாஸ் பகுதியில் தொடங்கினார். இதையடுத்து பீகாரின் அவுரங்காபாத்தில் இன்று (18-08-25) இரண்டாம் நாளாக ராகுல் காந்தி பேரணி நடத்தி வருகிறார். இந்தியா கூட்டணியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணியில் செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியாக முடிவடையும் என்று கூறப்படுகிறது.