பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். அந்த வகையில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2025) பங்கேற்றார்.
இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் வாக்காளர் அதிகார யாத்திரையின் ஒரு பகுதியாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “2023ஆம் ஆண்டில் நாங்கள் விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் ஆதாரங்களைப் பெறவும் தொடங்கியபோது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. என்ன நடந்தாலும் தேர்தல் ஆணையர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது அந்த சட்டம் ஆகும். தேர்தல் ஆணையர் நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்றால், அப்படி ஒரு சட்டத்தின் அவசியம் என்ன?. அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இவர்கள் (தேர்தல் ஆணையம்) நரேந்திர மோடிக்கு வாக்கு திருட்டில் உதவுகிறார்கள்.
வோட் சோரி (வாக்கு திருட்டு) என்பது இந்தியாவின் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் (EBC), தலித், இதர பிறபடுத்தப்பட்டவர்கள் (OBC), சிறுபான்மை மற்றும் ஏழை பொது வகுப்பினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். வாக்கை இழந்த பிறகு, ரேஷன் கார்டும், நிலமும் இழக்கப்படும். சுதந்திரத்திற்கு முந்தைய காலம் திரும்பும. அப்போது நீங்கள் அவமதிக்கப்படுவீர்கள், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, கல்வி வழங்கப்படவில்லை என்று கூறுவீர்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தபோது, ‘நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நரேந்திர மோடியிடம், 24 மணி நேரத்திற்குள் அவர் என்ன செய்தாலும் அதை நிறுத்தச் சொன்னேன்’ என்று டிரம்ப் கூறினார். மேலும் நரேந்திர மோடி 24 மணி நேரத்தில் அல்ல, ஐந்து மணி நேரத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார்.
ஊடகங்கள் நரேந்திர மோடி, அம்பானி மற்றும் அதானி ஆகியோருக்கு சொந்தமானவை. ஊடகங்கள் தேஜஸ்வி அல்லது முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சொந்தமானவை அல்ல. அதே போன்று ஊடகங்கள் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சொந்தமானவை அல்ல. அதானி, அம்பானி, டாடா மற்றும் பிர்லா ஆகியோரில் யார் தலித், பழங்குடி அல்லது பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லுங்கள். நீதித்துறையையும் பாருங்கள். பழங்குடியினர், தலித்துகள் அல்லது பிற்படுத்தப்பட்டோர் யாரும் இல்லை.
தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் உரிமையாளர்களின் பட்டியலை எனக்குக் கொடுங்கள். அங்கு எந்த தலித்தும் கிடைக்காது. 90% மக்கள் இதில் சேர்க்கப்படவில்லை. உங்கள் குரல் கேட்கப்படும் நாளில் இந்தியா முற்றிலுமாக மாறும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் அவர்கள் வாக்குகளைத் திருடுகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும், அப்போது உண்மை வெளிவரும் என்று நரேந்திர மோடியிடம் நேரில் சொன்னேன்” எனப் பேசினார்.