Rahul Gandhi says The Prime Minister has aversion to Gandhi’s thoughts
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் நடைமுறை இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றம் செய்து ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதோடு 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றியமைத்து இந்தி மொழியில் பெயர் வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே , நாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று (16-12-25) கூடிய போது மக்களவையில் விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி என்ற புதிய திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா தொடர்பாக நேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே கடும் காரசார விவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் ஆகிய இரண்டு விஷயங்கள் மீது பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வெறுப்பு உள்ளது, . ஊரக வேலை திட்டம் என்பது மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவின் உயிருள்ள உருவகமாகும். இது மில்லியன் கணக்கான கிராமப்புற வாழ்க்கைக்கு ஒரு உயிர்நாடியாகும். இது கோவிட் காலத்தில் அவர்களின் பொருளாதார பாதுகாப்பு கேடயமாகவும் நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், பிரதமர் மோடி எப்போதும் இந்தத் திட்டத்தால் எரிச்சலடைந்து வருகிறார், கடந்த பத்து ஆண்டுகளாக, அவர் அதைத் தளர்த்த முயற்சித்து வருகிறார். இன்று, அந்த திட்டத்தை முற்றிலுமாக அழிக்க அவர் உறுதியாக இருக்கிறார்.
இந்தப் புதிய மசோதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை அவமதிப்பதாகும் - மோடி அரசாங்கம் ஏற்கனவே கடுமையான வேலையின்மை மூலம் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது. இப்போது இந்த மசோதா கிராமப்புற ஏழைகளின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் அகற்றுவதற்கான ஒரு வழியாகும். கிராமப்புறங்களில் இருந்து நாடாளுமன்றம் வரை இந்த மக்கள் விரோத மசோதாவை நாங்கள் எதிர்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
Follow Us