பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். அந்த வகையில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2025) பங்கேற்றார். 

இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் வாக்காளர் அதிகார யாத்திரையின் ஒரு பகுதியாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “'இந்த (வாக்கு திருட்டு) முதன்முதலில் 2014க்கு முன்பு குஜராத்தில் தொடங்கியது. மேலும் அவர்கள் அதை 2014இல் தேசிய மட்டத்திற்குக் கொண்டு வந்தனர். குஜராத் மாதிரி (மாடல்) ஒரு பொருளாதார மாதிரி அல்ல; அது 'வாக்கு திருட்டு’ மாதிரி. அவர்கள் மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் தேர்தல்களைத் திருடினர். ஆனால் அப்போது எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் அவர்கள் அதை மிகைப்படுத்தியதால் நாங்கள் ஆதாரத்தைக் கண்டுபிடித்தோம். 

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையம் சுமார் 1 கோடி வாக்காளர்களை சேர்த்தது. அவர்கள் அனைவரும் பாஜகவுக்குச் சென்றனர். ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்குகள் எவ்வாறு திருடப்பட்டன என்பதை நாங்கள் உங்களுக்கு ஆதாரத்துடன் காண்பிப்போம். நரேந்திர மோடி வாக்குகளைத் திருடி தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்பதற்கு நான் முழுமையான உத்தரவாதத்துடன் இதைச் சொல்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உதவுகிறது” எனப் பேசினார்.