பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 22 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த நடவடிக்கை முழுமையான வெற்றியாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை அமெரிக்கா தான் நிறுத்தியது என்றும் வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது வலியுறுத்தி வருகின்றனர். அதே சமயம், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (23-07-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25 முறை கூறியுள்ளார். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் யார்?. அது அவரது வேலை அல்ல. ஆனால், இது குறித்து பிரதமர் ஒரு முறை கூட பதில் அளிக்கவில்லை. அது தான் உண்மை, அதிலிருந்து அவர் மறைக்க முடியாது.

ஒருபுறம் ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருப்பதாகக் நீங்கள் கூறுகிறீர்கள், மறுபுறம் வெற்றி அடைந்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். நடந்து கொண்டிருக்கிறதா? இல்லை முடிந்துவிட்டதா? இன்னொரு புறம், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுகிறார். அவர்கள் நமது வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டனர். எந்த நாடும் நம்மை ஆதரிக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவை அரசு தனிமைப்படுத்தியுள்ளது. டிரம்பின் கூற்றின் காரணமாகவே பிரதமர் மோடி நாடாளுமன்றத்தைத் தவிர்க்கிறார். பிரதமர் எப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியும்? அவர் என்ன சொல்வார்? டிரம்ப் தான் போர் நிறுத்தத்தை முடித்தார் என்றா? அவரால் அதை சொல்ல முடியாது. ஆனால் அதுதான் உண்மை. முழு உலகமும் இதை அறியும்.

Advertisment

பீகாரில் 52 லட்ச வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இது அந்த 52 லட்சம் மக்களைப் பற்றியது மட்டுமல்ல. அவர்கள் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏமாற்றியுள்ளனர். வாக்காளர் பட்டியலைக் காட்டுமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். சிசிடிவி ஆதாரத்தை காட்டுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம், ஆனால் அவர்கள் வீடியோகிராஃபி விதிகளை மாற்றினர். மகாராஷ்டிராவில் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில், நாங்கள் ஒரு பெரிய திருட்டைப் பிடித்துள்ளோம். திருட்டு எப்படி நடக்கிறது என்பதை நான் தேர்தல் ஆணையத்திடம் கருப்பு வெள்ளையில் காண்பிப்பேன். அவர்களின் விளையாட்டு இப்போது எங்களுக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இப்போது, அவர்கள் செய்வது என்னவென்றால், அவர்கள் வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள். மேலும் ஒரு புதிய வாக்காளர் பட்டியல் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்.