நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கடந்த 2 நாட்களாக ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசினர்.

அதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று (29-07-25) மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமலே இந்த தாக்குதலை எந்த உலக தலைவரும் நிறுத்தவில்லை என்று கூறினார். பிரதமர் மோடி மக்களவையில் பேசியதாவது, “மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை ஜனாதிபதி என்னுடன் பேச முயன்றார். அவர் ஒரு மணி நேரம் முயற்சித்தார். ஆனால் நான் எனது ராணுவத்துடனான சந்திப்பில் இருந்ததால் அவரது அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பின்னர், நான் அவரை திரும்ப அழைத்தேன். பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி தொலைபேசியில் என்னிடம் கூறினார்.  பாகிஸ்தானுக்கு இந்த நோக்கம் இருந்தால், அது அவர்களுக்கு நிறைய இழப்பை ஏற்படுத்தும் என்பதே எனது பதில். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், நாங்கள் ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதன் மூலம் பதிலடி கொடுப்போம். இதுதான் எனது பதில். முதல் நாளிலிருந்தே எங்கள் நடவடிக்கை தீவிரமடையவில்லை என்று நாங்கள் கூறி வந்தோம். உலகில் எந்தத் தலைவரும் ஆபரேஷன் சிந்தூரைத் நிறுத்தச் சொல்லவில்லை” என்று கூறினார்.

டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமலே யாரும் இந்த போரை நிறுத்தவில்லை என்று பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பேசிய நிலையில், தான் வேண்டுகோள் விடுத்ததால்தான் இந்தியா தாக்குதலை நிறுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மீண்டும் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய டிரம்ப்பிடம், இந்தியா 20-25% வரை அதிக வரிகளை செலுத்தப் போகிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். இந்தியா எனது நண்பர். எனது வேண்டுகோளின் பேரில் அவர்கள் பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்தியா ஒரு நல்ல நண்பராக இருந்து வருகிறது. ஆனால், அடிப்படையில் மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரிகளை விதிக்கிறது” என்று தெரிவித்தார். பிரதமர் மோடி நேற்று டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமல் மோதலை யாரும் நிறுத்தவில்லை என்று கூறிய அடுத்த நாளே, இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது நான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 30வது முறை கூறியிருப்பது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டிரம்ப்பின் பெயரை ஏன் பிரதமர் மோடி உச்சரிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “பிரதமரின் மெளனம் வெளிப்படையானது. நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் பெயரை பெயரிடுவதில் அவர் தயக்கம் காட்டுகிறார். டிரம்ப் பொய் சொல்லவில்லை என்று பிரதமர் சொல்லவில்லை என்பது தெளிவாகிறது. என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்களால் அதை சொல்ல முடியவில்லை, அதுதான் பிரச்சனை. இது தான் உண்மை. மோடி பேசினால், டிரம்ப் மனம் திறந்து சொல்வார். அதன் பின்னர், முழு உண்மையும் வெளிவரும். அதனால் தான் அது சொல்லப்படவில்லை. டிரம்ப் ஏன் இதையெல்லாம் சொல்கிறார்?. ஏனென்றால் அவர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறார். எனவே அவர் இவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். என்ன மாதிரியான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறினார்.

Advertisment

நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “இந்திரா காந்திக்கு இருந்த தைரியத்தில் 50 சதவீதம் கூட மோடிக்கு இருந்தால், டொனால்ட் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று அவர் நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும்” என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.