காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2024-இல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2023-இல் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக முறைகேடுகளைச் செய்ததாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருப்பினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நாளை (06-11-25) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் போட்டியிடுகிறார். ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக கூட்டணி, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்கிறது. கடந்த 1 மாதமாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற நிலையில், நேற்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.
நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா போல் ஹரியானா மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, முக்கிய ஆதாரங்களை வெளியிட்டார். கடந்தாண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும், அதில் பதிவான வாக்கில் 8இல் ஒரு வாக்கு கள்ள வாக்கு என்றும் குற்றம்சாட்டி ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், 1.24 வாக்காளர்களுக்கு போலி புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரேசில் மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரே தொகுதியில் ஒரே பெண் படத்துடன் 100 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு வாக்குச் சாவடிகளில் ஒரே படத்துடன் 223 பேர் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களை வெளியிட்டார்.
ஆதாரங்களை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, “ஹரியானா தேர்தலுக்குப் பிறகு பல காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏதோ தவறு இருப்பதாகத் தங்களிடம் கூறினார்கள். அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணித்திருந்தன, ஆனால் முடிவுகள் பாஜக வெற்றி பெறுவதாகக் கூறின” என்று பா.ஜ.க தலைவரும் முதல்வருமான நயாப் சிங் சைனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன என்றும், பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது என்றும் முடிவுகளுக்கு முன்பு ஊடகங்களுக்குச் சொல்லும் வீடியோவை காட்டினார். அதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “இந்த ஏற்பாடுகள் என்ன? தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறுகிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். பாஜக ஏற்பாடுகளைச் செய்துவிட்டது என்பதில் இந்த மனிதர் மிகவும் உறுதியாகவும் புன்னகையுடனும் இருக்கிறார்.
ஹரியானா வரலாற்றில் தபால் வாக்குப்பதிவு, வாக்குச் சாவடிகளில் கிடைத்த முடிவுகளுக்கு நேர்மாறாக இருப்பது இதுவே முதல் முறை. நான் தேர்தல் ஆணையத்தையும் இந்தியாவில் ஜனநாயக செயல்முறையையும் கேள்விக்குள்ளாக்குகிறேன், இதை நான் 100 சதவீத ஆதாரங்களுடன் செய்கிறேன். காங்கிரஸின் மகத்தான வெற்றியை தோல்வியாக மாற்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறி ஒரே சட்டமன்றத் தொகுதியில் ஒரே பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய 100 வாக்காளர் அடையாள அட்டைகளை அவர் சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து அவர், “இதனால்தான் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை அழிக்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு நொடியில் நகல்களை நீக்க முடியும். அவர்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது? காரணம்: அவர்கள் பாஜகவுக்கு உதவுகிறார்கள். அடுத்தது பீகாரிலும் ஆட்சியை திருட பா.ஜ.க சதி செய்கிறது” என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/rahulharyana-2025-11-05-17-35-14.jpg)