Rahul Gandhi released data to bjp Election fraud and Election Commission's credibility questioned
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும் பா.ஜ.கவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் மிகப்பெரிய முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு நடந்ததற்காக 100 சதவீதம் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஆதாரங்களை வெளியிடும்போது இந்த நாட்டில் தேர்தல் ஆணையம் இல்லாமல் போய்விடும் என்று அவர் பேசியிருந்தார். மேலும் அவர், “அவர்கள் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏமாற்றியுள்ளனர். வாக்காளர் பட்டியலைக் காட்டுமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். சிசிடிவி ஆதாரத்தை காட்டுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம், ஆனால் அவர்கள் வீடியோகிராஃபி விதிகளை மாற்றினர். மகாராஷ்டிராவில் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில், நாங்கள் ஒரு பெரிய திருட்டைப் பிடித்துள்ளோம். திருட்டு எப்படி நடக்கிறது என்பதை நான் தேர்தல் ஆணையத்திடம் கருப்பு வெள்ளையில் காண்பிப்பேன். அவர்களின் விளையாட்டு இப்போது எங்களுக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இப்போது, அவர்கள் செய்வது என்னவென்றால், அவர்கள் வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள். மேலும் ஒரு புதிய வாக்காளர் பட்டியல் கொண்டு வருவார்கள். தேர்தல் ஆணையம் உதவாததால் வாக்குத் திருட்டு குறித்து நாங்கள் ஆழமாக விசாரணை நடத்தினோம். நாங்கள் கண்டுபிடித்தது ஒரு அணுகுண்டு. அது வெடிக்கும்போது, இந்தியாவில் தேர்தல் ஆணையத்தைப் பார்க்க முடியாது” என்று கூறினார். இவருடைய பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாட்டில் எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை என்ற தரவுகளை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ராகுல் காந்தி இன்று (07-08-25) வெளியிட்டுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் பெரும் திருட்டு நடந்துள்ளது. மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் திருட்டு நடந்துள்ளது. காங்கிரஸ் நடத்திய ஆய்வில் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள், செல்லாத முகவரிகளில் இருப்பது கண்டறியப்பட்டது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் ஏன் வழங்கவில்லை. அப்படி செய்தால் 30 வினாடிகளுக்குள் மோசடி அம்பலபடுத்தப்படும். கட்சிகள் வாக்காளர் தரவை ஆராய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இயந்திரத்தால் படிக்க முடியாத ஆவணங்களை வழங்கி வருகிறது.
இந்த பணிக்காக எங்களுக்கு 6 மாதங்கள் எடுத்தது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவுகளைக் கொடுத்தால் எங்களுக்கு 30 வினாடிகள் மட்டுமே எடுத்திருக்கும். இந்தியாவில் தேர்தல்களைப் பார்க்கும்போது, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு மனிதன், ஒரு வாக்கு என்ற கருத்து எவ்வளவு பாதுகாப்பானது? சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள், வாக்காளர் பட்டியல் உண்மையா இல்லையா? இரண்டு புள்ளிகளின் அடிப்படையில் பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஜனநாயகத்திலும் ஒவ்வொரு கட்சியையும் ஆட்சி எதிர்ப்பு என்ற ஒன்று பாதிக்கும். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக பா.ஜ.க மட்டும் ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களால் பாதிக்கப்படாத ஒரே கட்சியாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகள், கருத்துக் கணிப்புகள் ஒன்றைச் சொல்கின்றன. ஹரியானா தேர்தல், மத்தியப் பிரதேசத் தேர்தல் ஆகியவற்றில் பார்த்தீர்கள். ஆனால் திடீரென்று முடிவுகள் முற்றிலும் மாறுபட்ட திசையில் ஏற்ற இறங்களுடன் சென்றன.
ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லாததற்கு எப்போதும் ஒரே காரணம் சொல்லப்படுகிறது. லாட்லி பெஹ்னா, புல்வாமா இப்போது ஆபரேஷன் சிந்தூர். எனவே இந்த முறையைப் பார்த்தோம். மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால் தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாத ஒரு காலம் இருந்தது. அது தனிப்பட்ட வாக்குப்பதிவு. முழு நாடும் ஒரே நாளில் வாக்களிக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில், பீகார் போன்ற மாநிலங்களில் வெவ்வேறு வாக்குப்பதிவு உள்ளது. சில நேரங்களில் இது மாதக்கணக்கில் நடக்கிறது. இது எங்களுக்கு சந்தேகமாக இருந்தது. பல மாதங்களாக, ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது? மகாராஷ்டிராவில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐந்து மாதங்களில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரங்கமாகத் தெரிவித்தோம். புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவின் மக்கள்தொகையை விட அதிகமாக இருந்தது, இது மிகவும் ஆச்சரியமான உண்மை. பின்னர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தல்களில், எங்கள் கூட்டணி அழிக்கப்பட்டது. அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தல்களில், எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மகாராஷ்டிராவில் மாநில அளவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் படத்தில் நுழைந்ததைக் கண்டறிந்தோம். எனவே, நாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுகினோம். நான் பாராளுமன்றத்தில் ஒரு உரை நிகழ்த்தினேன். இந்திய கூட்டணித் தலைவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர், ஆனால் எந்த பதிலும் இல்லை. பின்னர் நான் பல செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை எழுதினேன். அது எங்கள் வாதத்தின் மையக்கருவைப் படம்பிடித்தது. மகாராஷ்டிரா தேர்தல் திருடப்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் கட்டுரை வெளிவந்தபோது, அது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், நீங்கள் இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் வேலையில் இல்லை, அதைப் பாதுகாக்கும் வேலையில் இருக்கிறீர்கள். இந்தத் தகவல்கள் அனைத்தும் இப்போது சான்றாகும். கர்நாடக தகவல்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் பட்டியலும், இதுவே சான்றாகும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் இந்தியக் கொடிக்கும் எதிராகச் செய்யப்படும் குற்றம். இது அதற்குக் குறைவானதல்ல. இது ஒரு சட்டமன்றத்தில் நடந்த குற்றத்திற்கான சான்றாகும். நாங்கள் அந்த முறையைப் பார்ப்பதால் நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நாங்கள் அந்த முறையைப் படித்துள்ளோம். இந்தக் குற்றம் நாடு முழுவதும், மிகப்பெரிய அளவில் நடக்கிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் இப்போது ஒரு குற்றத்திற்கான சான்றாக உள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் அதை அழிக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளது” என்று கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக தேர்தல் ஆணையம் மீது இது மாதிரியான மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.