இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை (09-12-25) மற்றும் நாளை (10-12-25) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் குறித்த சிறப்பு விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (09-12-25) மக்களவையில் பேசினார். அப்போது அவர், “அவர்கள் சமத்துவத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை, படிநிலையில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த படிநிலையில் மேல் அவர்கள் இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இந்திய ஜனநாயகத்தை சேதப்படுத்த தேர்தல் ஆணையத்தை பாஜக வழிநடத்தி பயன்படுத்துகிறது.
ஹரியானா வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்றுள்ள ஒரு பிரேசிலிய பெண் எங்களிடம் உள்ளார். தேர்தல் திருடப்பட்டது, இந்த திருட்டு தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் செயல்முறையின் நேர்மையைப் பாதுகாக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. இந்தக் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயகம். வாக்கு திருட்டு ஒரு தேச விரோதச் செயல்.
வாக்குச்சாவடிப் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படம் பலமுறை இடம்பெற்றது ஏன்? லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் இருப்பது ஏன்? உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர் ஹரியானாவில் வாக்களிக்க ஏன் பட்டியலிடப்பட்டார்? இவை எனது நேரடியான கேள்விகள். அதற்கான தெளிவான ஆதாரத்தை நான் நாட்டின் முன் வைத்துள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை. தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதி ஏன் நீக்கப்பட்டார்? தலைமை நீதிபதியை நீக்க என்ன உள்நோக்கம்?. தேர்தல் ஆணையர் யார் என்பதை சரியாகத் தேர்ந்தெடுப்பதில் பிரதமரும் அமித் ஷாவும் ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளனர்?.
பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேர்தல் ஆணையருக்கு ஏன் இந்த விதிவிலக்கு பரிசை வழங்க வேண்டும்? இதற்கு முன்பு எந்த பிரதமரும் தேர்தல் ஆணையருக்கு வழங்காத இந்த மகத்தான பரிசை அவர்கள் ஏன் வழங்க வேண்டும்?. சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றில் உள்ள தரவுகள் தொடர்பான சட்டம் ஏன் மாற்றப்பட்டது? தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தை அனுமதிக்கும் சட்டம் ஏன் இயற்றப்பட்டது? அதற்கான அவசியம் என்ன? தரவு பற்றிய கேள்வி என்பதால் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தரவு பற்றிய கேள்வி அல்ல; மாறாக, இது தேர்தல்களைத் திருடும் கேள்வி” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/09/rahulpar-2025-12-09-17-57-33.jpg)