பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான சான்றுகளை நேற்று (07-08-25) ராகுல் காந்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். மேலும் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 25 மக்களவைத் தொகுதிகளால் மட்டுமே பிரதமர் மோடி அந்த பதவியில் இருக்கிறார் என்றும், இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி பகிர்ந்த வாக்காளர் பட்டியலின் விளக்கக்காட்சியில், ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6இன் தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘ராகுல் காந்தி தனது ஆராய்ச்சியை நம்பி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவரது குற்றச்சாட்டுகள் உண்மை என்று அவர் நம்பினால், பிரமாணத்தில் கையொப்பமிடுவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது. அவர் பிரமாணத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர் தனது  ஆராய்ச்சி, அதன் விளைவாக வரும் முடிவுகள் மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். இந்த விவகாரத்தில் அவர் தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவருக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன’ என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனிடையே, வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி இன்று (08-08-25) பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்துக்கு 5 கேள்விகளை முன்வைத்தார். அதாவது அவர் கூறியதாவது, “இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் 5 கேள்விகளை முன்வைக்கிறேன். இந்த நாடு அதற்கான பதில்களைக் கேட்கிறது. எங்களை மிரட்டுவதற்கு பதிலாக, என்னை மிரட்டுவதற்கு பதிலாக இந்த 5 கேள்விகளுக்கு பதிலளிக்கவும். 1. டிஜிட்டல் இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில் வாக்காளர் பட்டியலை ஏன் கொடுக்கவில்லை? நீங்கள் என்ன மறைக்கிறீர்கள்? 2. வீடியோ ஆதாரங்களை ஏன் அழிக்கிறீர்கள்? யாருடைய உத்தரவின் பேரில்?. 3.போலி வாக்களிப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் ஏன்?. 4. எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேர்தல் ஆணையம் ஏன் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது? 5. தேர்தல் ஆணையம் ஏன் பா.ஜ.கவின் முகவரைப் போல நடந்து கொள்கிறது?.” என்று கேள்வி எழுப்பினார்.