தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர்களான திருச்சி சிவா எம்.பி., ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களான அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த 22ஆம் தேதி சந்தித்துப் பேசினார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கே.சி. வேணுகோபால் வழங்கியதாகவும், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பதிலுக்கு கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க சிரமம் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கூறியதாகக் கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/25/raghul-nilgiri-speech-2026-02-25-08-06-43.jpg)
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி வைப்பதற்காக அவர் தமிழகம் வர உள்ளார் எனக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாஜக தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஸ் கோயல் என அடுத்தடுத்து தமிழகத்திற்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ள நிலையில், மார்ச் 5ஆம் தேதி ராகுல்காந்தியும் தமிழகம் வருகை தர உள்ள தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us