நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழாவிற்கான நிகழ்ச்சி இன்று (13.01.2026) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக பழங்குடியினருடன் இணைந்து ராகுல் காந்தி உற்சாகமாக நடனமாடினார். மாணவர் ஒருவர் தமிழில் ராகுல் காந்திக்கு பொங்கல் வாழ்த்து கூற, அவரும் தமிழில் திருப்பி பொங்கல் வாழ்த்து கூறினார்.
இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றுகையில், “நாம் ஒவ்வொரு நாளும் தகவல் தொழில்நுட்ப புரட்சி, செயற்கை நுண்ணறிவு, தரவு, இந்த வார்த்தைகளை எல்லாம் கேட்கிறோம். இது தகவல் யுகம் என்றும் கேள்விப்படுகிறோம். தகவல்கள் சுதந்திரமாகக் கிடைக்கும் மற்றும் அணுகக்கூடிய ஒரு காலகட்டம் ஆகும். இது போன்ற ஒரு பள்ளி நிறுவனத்தின் வேலை, தகவல்களைப் பார்க்கவும், தகவல்களை அறிவாக மாற்றவும், இன்னும் முக்கியமாக ஞானத்துடன் நடந்து கொள்ளவும் கூடிய இளைஞர்களை (மக்கள்) உருவாக்குவது ஆகும். ஏனென்றால், தகவல் யுகத்தில் நமக்கு அறிவு (ஞானம்) இல்லையென்றால், தகவல்களால் நாம் ஈர்க்கப்பட்டால், உலகம் மிகவும் விரும்பத்தகாத இடமாக மாறும்.
நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடுவோம். ஒருவருக்கொருவர் தீங்கு விளைவிப்போம். எனவே இது போன்ற பள்ளிகள் இளம் மாணவர்களை அறிவுள்ள குடிமக்களாக மாற்றுவதால் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்து பேசுகையில், “நான் நம்புவது என்னவென்றால், கல்வி மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கக்கூடாது. கல்வி தனியார்மயமாக்கப்படக்கூடாது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கலாம். ஆனால் நல்ல தரமான அரசு கல்விக்கான தேவை உள்ளது. அதற்காக, அரசாங்கம் கல்விக்கான பட்ஜெட்டில் பணத்தை ஒதுக்க வேண்டும். எனவே, இது முதல் விஷயம். இரண்டாவது விஷயம் என்னவென்றால், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/13/raghul-nilgiri-speech-stu-2026-01-13-17-11-02.jpg)
சேவைத் துறையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் வேலை வாய்ப்புகள் அல்ல. உற்பத்தி, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. அதனால் அவை நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும். ஏனென்றால் வேலை இல்லாமல் நீங்கள் வாய்ப்பை வழங்க முடியாது. எனவே நான் அதைத்தான் செய்வேன். கல்வி முறையை விட நீங்கள் இன்னும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். மென்பொருள் பொறியியல் மற்றும் இன்ஃபோசிஸ் போன்றவற்றில் நாம் அடைந்த வெற்றிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்தத் துறை இப்போது சிக்கல்களைச் சந்திக்கப் போகிறது. அதற்கு நீங்கள் குறிப்பிட்டது போல செயற்கை நுண்ணறிவு தான் காரணம்.
எனவே, நாம் சிறப்பாகச் செயல்படும் சேவைத் துறையில் பின்னடைவைச் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், நாம் இப்போது ஒரு உற்பத்தித் துறையை உருவாக்கத் தொடங்க வேண்டும். இன்று என்ன நடக்கிறது என்றால், சீனர்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாம் பயன்படுத்தும் மைக்ரோஃபோன், கேமரா எனப் பெரும்பாலும் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் இவை இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதைச் செய்ய, நாம் நமது மனப்போக்கை (Mindset) மாற்றிக்கொள்ள வேண்டும்” எனப் பேசினார். மேலும், “ஆண்களைவிட பெண்கள் மிகவும் திறமையானவர்கள். தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள். பெண்கள் இன்னும் பலதுறைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/raghul-nilgiri-speech-2026-01-13-17-10-28.jpg)