300 எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி பேரணி!

perani

Rahul Gandhi marches towards the Election Commission with 300 opposition MPs!

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வந்தது.

இதனிடையே, பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான தரவுகளை ஆதாரங்களோடு ராகுல் காந்தி கடந்த 7ஆம் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். மேலும் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 25 மக்களவைத் தொகுதிகளால் மட்டுமே பிரதமர் மோடி அந்த பதவியில் இருக்கிறார் என்றும், இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

ராகுல் காந்தி பகிர்ந்த வாக்காளர் பட்டியலின் விளக்கக்காட்சியில், ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6இன் தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும்,அந்த குற்றச்சாட்டுகளை உண்மை என்று அவர் நம்பினால் பிராமணத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை எதிர்த்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி இன்று (11-08-25) காலை 11:30 மணியளவில் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘வாக்கு திருட்டு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி சஞ்சய் ராவத், சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிடோர் பங்கேற்றனர். 

election commision of india election commission Parliament Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe