நாடு முழுவதும் நேற்று (20-10-25) தீபாவளி பண்டிகை உற்சாகத்துடனும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும், கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கொண்டனர்.
இந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாரம்பரிய இனிப்பு கடையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி ஜிலேபி, லட்டு போன்ற பலகார தயாரிப்பில் ஈடுபட்டு அசத்தினார். தலைநகர் டெல்லியில் உள்ள 235 வருடங்கள் பழமையான மற்றும் புகழ் பெற்ற இனிப்பு கடையான கண்டேவாலா கடைக்கு தீபாவளி பண்டிகையையொட்டி ராகுல் காந்தி சென்றார். அங்கு சென்ற ராகுல் காந்தி, கடை ஊழியர்களுடன் ஜிலேபி மற்றும் லட்டு தயாரிப்பில் ஈடுபட்டார். மேலும், கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, தீபாவளியின் உண்மையான இனிமை தட்டில் மட்டுமல்லாமல் உறவுகளிலும் சமூகத்திலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.