Rahul Gandhi criticizes Narendra Modi at Bihar campaign rally
பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் பீகாரின் முஷாஃபர்பூரில் தனது முதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
அங்கு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “உங்கள் வாக்குகளுக்கு ஈடாக நரேந்திர மோடியை நடனமாடச் சொன்னால் கூட அவர் மேடையில் நடனமாடுவார். நரேந்திர மோடி தனது நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றார். அவருக்கும் யமுனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சத் பூஜைக்கும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு உங்கள் வாக்கு மட்டுமே வேண்டும். பீகாரில் 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த போதிலும் பின்தங்கிய பிரிவினருக்கு நிதிஷ் குமார் எதுவும் செய்யவில்லை. மாநிலத்தை கட்டுப்படுத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரின் பிம்பத்தை பா.ஜ.க தவறாக பயன்படுத்துகிறது.
நிதிஷ் குமாரின் முகத்தை மட்டுமே பயன்படுத்தி இங்கே ஆட்சி நடக்கிறது. அவரை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் பாஜகவின் கைகளில் உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல் அங்கு கேட்கிறது என்று நீங்கள் நினைக்கக்கூடாது. பாஜக கையில் ரிமோட் கண்ட்ரோல் உள்ளது, அவர்களுக்கு சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் உங்கள் வாக்குகளைத் திருடுவதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மகாராஷ்டிராவில் தேர்தல்களைத் திருடினர், ஹரியானாவில் தேர்தல்களைத் திருடினர், பீகாரில் தங்களால் இயன்றதைச் செய்வார்கள்.
பீகாரில் பீகாரின் குரலைக் கொண்ட ஒரு அரசாங்கம் அமைக்கப்படாமல் இருக்க அவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள். சிறப்பு தீவிர திருத்தம் என்பதன் அர்த்தம் இதுதான். ஆனால் பீகாரில் ஒவ்வொரு வகுப்பினருக்கும், ஒவ்வொரு சாதியினருக்கும், ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு அரசாங்கத்தை அமைப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். நாங்கள் யாரையும் விட்டு வைக்க மாட்டோம்” என்று பேசினார்.
Follow Us