டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது, “பிரதமர் மோடியை இரண்டு மூன்று முறை சந்தித்துப் அவருடன் பேசிய பிறகு, அவர் பெரிய பிரச்சனையாக இல்லை என்பதை உணர்ந்தேன். அவருக்கு அவ்வளவு அதிகாரம் இல்லை. பிரதமர் மோடியைப் பற்றி எந்தப் புகழ்ச்சியும் இல்லை. ஊடகங்கள் அவரை அளவுக்கு மீறி ஊதிப் பெரிதாக்கியுள்ளன. அவர் ஒரு ஷோ மட்டும் தான். அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிகாரத்துவத்தில் பட்டியலின மற்றும் சிறுபான்மையினர் சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின வகுப்பினர் ஆகியோர் கிட்டத்தட்ட 90 சதவீதம் உள்ளனர். ஆனால், பட்ஜெட் தயாரிக்கப்பட்ட பிறகு அல்வா விநியோகிக்கப்படுகிறது. இந்த 90% பேரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு யாரும் இல்லை. இந்த 90% மக்கள் தொகைதான் நாட்டின் உற்பத்தி சக்தியாக அமைகிறது” என்று கூறினார். மேலும் அவர் அங்குள்ள தொண்டர்களை நோக்கி, “நீங்கள் தான் அந்த அல்வாவை செய்கிறீர்கள், ஆனால் அதை அவர்கள் சாப்பிடுகிறார்கள். அவர்கள் அல்வா சாப்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்,குறைந்தபட்சம் நீங்களும் சாப்பிட வேண்டும்.
2004இன் ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது நான் அரசியலில் சேர்ந்தேன். நான் பாதுகாக்க வேண்டியதைப் போல, பிற்படுத்தப்பட்ட மக்களை நான் பாதுகாக்கவில்லை. உங்கள் வரலாறு, உங்கள் பிரச்சனைகளைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்திருந்தால் அந்த நேரத்தில் நான் ஒரு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பேன். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது கட்சியின் தவறு அல்ல, என்னுடைய தவறு. இதை நான் சரிசெய்யப் போகிறேன்” என்று கூறினார்.