Rahul Gandhi alleges Like Maharashtra, there is an attempt to rig votes in Bihar too
பீகார் மாநிலத்தில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிற மகா கூட்டணிக் கட்சிகள் இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சோன்பூர் மற்றும் ஹாஜிபூரில் உள்ள சாலைகளை இடை மறித்தும் டயர்களையும் எரித்தும், ஜெகனாபாத்தில் ரயில் பாதைகளை மறித்தும் உள்ளூர் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பாட்னாவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்று மாநிலத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து ஹரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில், இந்தியா கூட்டணி மகாராஷ்டிராவில் அதிக இடங்களைப் பிடித்திருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி மோசமாக தோற்றது. நாங்கள் அந்த நேரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விஷயம் குறித்து வேலை செய்து ஆராய ஆரம்பித்தோம். 21ஆம் நூற்றாண்டில் தரவுகளை படிக்க ஆரம்பித்தோம். அதில், மக்களவைத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கு இடையே 1 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டுபிடித்தோம். சட்டமன்றத் தேர்தலில் 10% அதிகமானோர் வாக்களித்தனர். வாக்காளர்கள் அதிகரிக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிகளிலும், பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. அனைத்து புதிய வாக்கும் பா.ஜ.கவுக்குச் சென்றுள்ளன.
நாங்கள் இப்போது பீகாருக்கு வந்துள்ளோம். இந்தியாவில் உள்ள குடிமகனுக்கும் வாக்களுக்கும் உரிமை உண்டு என்பதை நமது அரசியலமைப்பு கூறுகிறது. மகாராஷ்டிரா தேர்தல் திருடப்பட்டது போல, பீகார் தேர்தலையும் திருட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை இந்தியா மற்றும் பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். மகாராஷ்டிரா மாதிரியை நாம் புரிந்துகொண்டோம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இப்போது அவர்கள், பீகார் மாதிரியை கொண்டு வந்துள்ளனர். ஏழைகளின் வாக்குகளை பறிப்பதற்கு இது ஒரு முயற்சி என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால், இது பீகார் என்று அவர்களுக்குத் தெரியாது. பீகார் மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள். சில வாக்குச்சாவடி இடங்களில், 4,000 முதல் 5,000 வாக்குகள் பதிவாகியிருந்தது. இருப்பினும், ஏழை மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலும், வாக்குச்சாவடியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கேட்ட போது அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். ஒரு முறை அல்ல, பல முறை நாங்கள் அவர்களிடம் கேட்டுவிட்டோம். வாக்காளர் பட்டியலை எங்களுக்கு தர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. வாக்குச்சாவடி சிசிடிவி கேமரா காட்சிகளும் நாங்கள் பெறலாம் என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால், இன்று வரை மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலை எங்களுக்கு தரவில்லை. அவர்கள் உண்மையை மறைப்பதற்காக வீடியோகிராபி விதிகளை கூட மாற்றிவிட்டார்கள்” என்று கூறினார்.