மதுரை மாவட்டம் செக்காணூரணியில் செயல்பட்டு வரும் ஐடிஐ பயிற்சி மையத்தின் விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கையில், “மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரணி காவல் நிலைய எல்லையில், செக்காணூரனி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன், செக்காணூரணி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தங்கி உள்ளனர். 

Advertisment

இந்நிலையில், அரசு தொழிற்பயிற்சி முதலாம் ஆண்டு மாணவர்களில் 15 வயது மாணவரை, 17 வயதுள்ள 3 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த போது நிர்வாணப்படுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அனுப்பியுள்ளனர். இதில் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது போல் பாதிக்கப்பட்ட சிறுவன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது விசாரணையில் தெரிய வருகிறது. இது சம்பந்தமாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் செக்காணூரனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் இது போன்ற தவறான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பவேண்டாம் என மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே 3 சிறுவர்களும் தொழிற்பயிற்சி பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற விடுதியில் மாவட்ட கல்வி அதிகாரி ஜவகர் விசாரணை நடத்தியிருந்தார். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 சிறுவர்கள் மீதும் ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக விடுதியின் காப்பாளர் பாலசுப்பிரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.