நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான வழக்கில் டெல்லியில் 8 வாரங்களில் தெருநாய்களைப் பிடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல் நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தெரு நாய்களால் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் ரேபிஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் ஒரு பரபரப்பைக் கூட்டியுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. தறித்தொழில் செய்து வந்த குப்புசாமி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் அந்தப் பகுதியில் உள்ள நபர்களை கடிக்க முயன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி தான் வளர்த்த நாயை தானே அடித்துக் கொல்ல முன்றுள்ளார். அப்பொழுது குப்புசாமியையும் அந்த நாய் கடித்தது.
கடிபட்ட குப்புசாமி இதற்காக எந்த ஒரு மருத்துவச் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலைக்குச் சென்று அவதிப்பட்டுள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவருக்கு 'ரேபிஸ்' நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குப்புசாமி இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.