விருதுநகரில் மலைப் பகுதியை ஒட்டி கால்நடைகளை மேய்த்து வந்த முதியவர் ஒருவர் காணாமல் போன மாட்டை தேடிச் சென்றபோது மலைப்பாம்புக்கு இரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்துள்ளது செண்பகத்தோப்பு எனும் மலை கிராமம். அந்தப்பகுதி மக்களுக்கு கால்நடை மேய்ச்சல் என்பது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மலையை ஒட்டிய பகுதியில் செண்பகத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பலரும் கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். இந்நிலையில் அதே ஊரில் வசித்துவரும் முத்தையா என்ற முதியவர் கால்நடை மேய்ச்சலில் பல ஆண்டுளாக ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை தேடி வனப்பகுதிக்குச் சென்ற முதியவர் முத்தையா வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இறுதியாக வனத்துறையினருடன் சேர்ந்து உறவினர்கள் முதியவரை தேடிய நிலையில் முத்தையா உடல் மலைப்பாம்பு சுற்றிய நிலையில் இருந்தது. வனத்துறையினர் மலைப்பாம்பை விரட்டி முத்தையாவின் சடலத்தை மீட்டனர். 

செண்பகத்தோப்பு அருவி என்பதும் அந்த பகுதியில் பிரபலமான சுற்றுலாத் தலமாக இருக்கிறது. மேலும் அங்குள்ள ராக்காட்சி அம்மன் கோயிலுக்கும் அதிகப்படியான பக்தர்களும் வந்து செல்கின்றனர். முதியவர் மலைப்பாம்பு சுற்றி உயிரிழந்திற்கும் நிலையில் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment