சென்னை உள்ளகரம் நியூ இந்தியன் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, புழுதிவாக்கம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி காலை வகுப்பறையில் இங்க் பேனாவைத் திறந்த போது, இங்க் சட்டை, பாவாடை மற்றும் தரையில் கொட்டியது. இதைப் பார்த்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, “ஏன் இங்க் பேனா கொண்டு வந்தாய்?” என்று மிரட்டி, தரையைத் துடைக்கும் மாப் கட்டையால் சிறுமியின் கை மற்றும் காலில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் கை, காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீடு திரும்பிய சிறுமி, பள்ளியில் நடந்தவற்றைத் தாயிடம் கூறிக் கதறி அழுதுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று சிறுமியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் நியாயம் கேட்டிருக்கின்றனர். பின்னர் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மடிப்பாக்கம் காவல்துறையினரும், தொடக்கப் பள்ளி உதவி கல்வி அலுவலர் சுஜாதாவும் விரைந்து வந்து, மாணவியின் பெற்றோருடனும் உறவினர்களுடனும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 

Advertisment

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தலைமை ஆசிரியை இந்திராகாந்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.