பெருகிவரும் டிஜிட்டல் யுகத்தின் காரணமாக, இந்தியாவில் தற்போது ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பும்போது பலவிதமான மோசடி சம்பவங்கள் நடக்கின்றன. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்தவண்ணமே உள்ளன. இந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தமிழ்நாட்டு இளைஞரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வசீம். 27 வயதான இவர், கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வசீம் தனது நண்பர்களான அஜீஸ், நவ்சாத் ஆகியோருடன் சேர்ந்து ஆன்லைனில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பஞ்சாப் காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனால், விசாரணையைத் தீவிரப்படுத்திய பஞ்சாப் மாநில காவல்துறையினர், பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட செல்போன் எண்ணைக் கண்டறிந்தபோது, அது பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வசீமுடையது எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று வேலூர் வந்த பஞ்சாப் மாநில காவல்துறையினர், வசீமைக் கைது செய்து பஞ்சாப்பிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்த முழு விவரம் தெரியவரும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.