ஆயுத பூஜை விழா நாளை மறுநாள் (01.10.2025 -புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக தேங்காய், பூசணி, எழுமிச்சை பழம், கடலை பொறி உள்பட பல்வேறு  பொருட்களும் விற்பனைக்காக வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்து காத்திருக்கின்றனர். அதே போல, மாலை கட்ட பயன்படும் பூக்கள் மொத்த விற்பனை இன்றே (29.09.2025) தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பூ கமிசன் கடைகளில் பெரிய சந்தைகளில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பூ சந்தை. 

Advertisment

கீரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செரியலூர், பனங்குளம், பாண்டிக்குடி, பெரியாலூர், நெய்வத்தளி, மேற்பனக்காடு, குளமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி நகரம், மாங்காடு, வடகாடு, அணவயல், கரம்பக்காடு, புள்ளாண்விடுதி, ஆலங்காடு, வம்பன், திருவரங்குளம், அரசடிப்பட்டி, ராயப்பட்டி உள்பட பல கிராமங்களிலும் பூக்கள் உற்பத்தி அதிகம். உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலம் பூ கமிசன கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நாளை மறுநாள் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு மாலைகள் கட்டுவதற்காக அதற்கான பூக்களான செண்டி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பச்சை ஆகியவை இன்று (திங்கள்கிழமை) மாலையே விற்பனை தொடங்கியது. 

Advertisment

வழக்கமாக இந்த காலங்களில் விற்பனைக்கு வரும் பூக்களைவிட குறைந்த அளவே விற்பனைக்கு வந்ததால் விலையும் உயர்ந்திருந்தது. செண்டி, கோழிக்கொண்டை, செவந்தி பூக்கள், பச்சை ஆகியவை தரத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை ஆனது. கீரமங்கலத்தில் பூக்கள் வாங்குவதற்காக பேராவூரணி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாரூர் என பல ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். மேலும் நாளை (30.09.2025 - செவ்வாய்க்கிழமை) காலையும் இதே போல வேகமான விற்பனை இருக்கும் என்கின்றனர்.