Pugazhendi condemned removal thanthai Periyar from BJP ADMK convention pavilion
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி, இன்று (28-02-26) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்துப் பேசினார். இவர்கள் இருவரும் தனியாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக புகழேந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, “திராவிடர் கழகத்தினுடைய தலைவரும், ஆசிரியருமான வீரமணியை பார்த்துவிட்டு வெளியில் வருகிறேன். அவரை வரவேற்று சந்தித்தேன். தந்தை பெரியார் படத்தை முகப்பிலிருந்து அகற்றுகின்ற காட்சியை நான் தொலைக்காட்சிகள் மூலமாக பார்த்தேன். மதுரையில் நாளை பிரதமர் வருகிறார். அந்த கூட்டத்தில் திராவிட இயக்கத்தினுடைய உயிர் நாடி தந்தை பெரியாருடைய படத்தை அகற்றுவதை பார்த்து நான் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், பழனிசாமிக்கும், அவருடன் கூட இருப்பவர்களுக்கும் பெரியாரைப் பற்றி என்ன தெரியும்? தெரிந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் ஏன் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கொள்கிறார். எனவே பெரியார் படத்தை தெரியாமல் வைத்துவிட்டார்கள். தந்தை பெரியாரின் வரலாறு தெரியாதவர்கள் அவர்கள். ஆகவே அதை எடுத்து போய் முகப்பில் வைத்தால், ஆர்எஸ்எஸ்காரன் வந்து ஏற்பார்களா? இவர்கள் இந்து முன்னணி மாநாட்டில் ஏறி ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை முழங்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் காரரும், பா.ஜ.ககாரரும், மோடியும் எப்படி தந்தை பெரியாரை ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே அந்த படத்தை அவர்கள் கழற்றி எடுப்பது கண்டனத்துக்குரியது என்றாலும் இவர்களுக்கெல்லாம் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் தெரியாது. ஆகவே அதற்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏன் வைத்தார்கள் என்பதைதான் ஆச்சரியமாக நாம் பார்க்க வேண்டும். அன்றைக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் எம்ஜிஆர் அகற்றப்பட்டார், ஜெயலலிதா அகற்றப்பட்டார். சில தினங்களுக்கு நடந்த பிரதமர் வந்திருந்த கூட்டத்தில் குக்கர் சின்னம் பெரியதாக தெரிந்தது. ஆனால், எங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் தெரியவே இல்லை. எங்கோ ஓரமாக சின்னதாக போட்டிருந்தார்களாம்.
ஆகவே தந்தை பெரியார் தான் திராவிட இயக்கத்தினுடைய உயிர்நாடி, தந்தை பெரியார் இல்லாமல் எதுவுமே இங்கே இல்லை, யாருமே இல்லை. திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார் தலைக்காவேரி. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரை தனது தலைவராக ஏற்றுக்கொண்டு, எப்பொழுதும் நாற்காலி காலியாக இருக்கும். இந்த நாற்காலி பெரியாருக்கு சொந்தமானது என்று அந்த நாற்காலியை விட்டு வைத்து அழகு பார்த்தார். ஆட்சிக்கு வந்த பின்னாலும் இது பெரியாரின் ஆட்சி என்று சொன்னார். ஆகவே அண்ணா ஆகட்டும், எம்ஜிஆர் ஆகட்டும், கலைஞர் ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும், திராவிட இயக்கத்தில் வந்த அந்த இரத்தம் ஓடுகின்ற அவர்களுக்கு தந்தை பெரியாரை தெரியும், புரியும். வடக்கே இருப்பவர்கள் கூட கொண்டாடுகிறார்கள். பேச்சு பேச்சுக்கு திருமாவளவனும் சரி, இந்த நாட்டினுடைய முதல் அமைச்சரும் சரி, மற்ற தலைவர்களும் சரி, தந்தை பெரியாரை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரியாரை பற்றி தெரியாது. ஆகவே அவர்களிடம் முகப்பில் பெரியாரை வைத்து எடுத்துவிட்டார்கள் என்று சொல்வதே தவறு. பெரியாரை தெரியாதவர்களும் புரியாதவர்களும் அதை எடுத்திருக்கிறார்கள். ஆகவே ஆர்எஸ்எஸ் அடிமைகள், பிஜேபி அடிமைகள் அதைத்தான் செய்வார்கள். இதிலே நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்” என்று கூறினார்.
Follow Us