இந்தியாவில் கால்நடைகளுக்கு இணையாக நாய்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தினசரி நாய்கள் கடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து ரேபிஸ் பாதிக்கப்பட்டவர்களும் ஏராளம். ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. தற்போது தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் பலமாக எழுந்துள்ளது. ஆனாலும் நாய்கள் கடிப்பது தொடரந்து கொண்டு தான் உள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (09.09.2025 - செவ்வாய்க் கிழமை) மதியம் உணவு நேரத்தில் மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த ஒரு தெரு நாய் 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவரை கடித்துள்ளது. சத்தம் கேட்டு சக மாணவர்கள் நாயை விரட்டியதால் ஏராளமான மாணவர்கள் நாய் கடியில் இருந்து தப்பினர். உடனே அந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல ஏராளமான பள்ளி வளாகங்களில் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் கொட்டும் உணவுக்காக ஏராளமான நாய்கள் பள்ளி வளாகங்களுக்குள் வந்துவிடுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.