புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவரை தூக்கியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது என்று அம்மாநில சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஒரு அரசாக இருந்தாலும் அது முழுக்க, முழுக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஆளுநரோ, துணை நிலை ஆளுநரோ மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஆட்டுவிக்கும் நிலையில் இருக்க கூடாது. அந்தவகையில் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களும் இருக்க கூடாது என்பதும் திமுகவின் கொள்கை. முன்பு மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசே நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்து வந்தது. மத்தியில் கடந்த 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் அதிகாரத்தையும் பறித்து கொண்டது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியில், கல்வி ரீதியில், நிர்வாக ரீதியில் ஆலோசனைகளை கூற வல்லுனர்கள் வேண்டும் என்ற காரணத்திற்காக நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் பிரதிநிதிகளே நல்ல ஆலோசனை தரக்கூடியவர்களாகத்தான் உள்ளனர். எனவே நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியே தேவையில்லை, அதிலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரி அரசால் நியமித்து கொள்ள முடியாத  நிலையில் புதுச்சேரிக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை என்பதே மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. 

103

Advertisment

மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தால் அரசுக்கு பொருளாதார இழப்பும், தொகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும்தான் ஏற்பட்டு வருகிறது. அதாவது நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், வாகன வசதி, உதவியாளர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நியமன எம்.எல்.ஏ.விற்கும் பல லட்சம் அரசுக்கு வீண்செலவு ஏற்படுகிறது. அத்துடன் பதவிக்காலம் முடிந்தால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சி இறுதியில் சில தினங்கள் இருக்கும்போது ஒரு நியமன எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட பின்னர் சட்டசபையே நடைபெறவில்லை. ஆனால் அவருக்கும் தற்போது எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆட்சிக்கு 6 மாதமே இருக்கும் நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து,  3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க உள்ளனர். இதன் மூலம் தற்போதைய நிலையில் இந்த ஆட்சி இறுதியில் மக்களால் தேர்வு செய்யப்படாத 6 பேருக்கு எம்.எல்.ஏ. போர்வையில் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் அவர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்ய முன்வருவதில்லை. இதனால் தொகுதி எம்.எல்.ஏ.விற்கும் நியமன எம்.எல்.ஏ.,விற்கும் பிரச்சனை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது. 

Advertisment

எனவே நியன எம்.எல்.ஏ.க்கள் நியமன முறை ரத்து செய்யப்பட வேண்டும். அல்லது நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதாவது யார், யார் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்படலாம், அவர்களுக்கான தகுதிகள், உரிமைகள், அதிகாரங்கள் என்ன? என்பதையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அதன்பிறகே நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வேண்டும். 

புதுச்சேரியில் ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்., பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் ஒரே ஒரு பெண் ஆதிதிராவிட எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்காவிற்கு அமைச்சர் பதவி கொடுத்தது. 2 ஆண்டுகள் கழித்து காரணம் ஏதும் சொல்லாமல் அவரிடம் இருந்து பதவியை பறித்து கொண்டது. இந்நிலையில் அமைச்சரவையில் மாற்றம் வேண்டும் என்று கூறியதற்காக கூறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமாரையே அக்கட்சி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டது. இதற்கும் கட்சி தலைமையோ, முதல்வரோ, ஆளுநரோ எந்த காரணமும் சொல்லவில்லை. 

இதன் மூலம் புதுச்சேரி அமைச்சரவையில் இருந்த ஆதிதிராவிடர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது. மேலும் ஏற்கனவே புதுச்சேரியில் ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்படும் சிறப்பு கூறு நிதி முழுமையாக அவர்களுக்கு செலவு செய்யப்படவில்லை. நிதி பெரும்பாலும் மடைமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு மடைமாற்றம் செய்யப்படுவது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் அமைச்சராக இருந்தவரை குறைந்து இருந்தது. மேலும் அத்துறையில் திட்டங்களை செயல்படுத்த போதிய பொறியாளரே இல்லை. 

இதுபோன்ற நிலையில் அமைச்சரவையில் இருந்து ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவரை தூக்கியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த ஒருவருக்கே மீண்டும் அமைச்சரவையில் உள்ள ஒரு காலியிடத்தை நிரப்ப வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.