கடந்த ஆண்டு புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரொடமைன் பி எனப்படும் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் ரசாயணம் கலந்த பஞ்சு மிட்டாய்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அதோடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பஞ்சு மிட்டாய்களை ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர். அப்போது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை அப்போதைய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார் இந்நிலையில் புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் மற்றும் ரொடமைன் பி கலந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி முகமது யாசின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Follow Us