பெண்களின் வளர்ச்சிக்குத் தமிழக அரசு பல்வேறு முன் மாதிரியான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது தான், ‘மகளிர் உரிமை தொகை’ திட்டம். இந்த திட்டம் மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக மதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்திற்காக 13,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

சமீபத்தில், இந்த உரிமத்தொகையைக் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே (கோடைக்கால சிறப்புத் தொகுப்பு) ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக சேர்த்து ரூ.5,000 எனப் பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்தது. இது தமிழகம் முழுவதும், பெரும் பேசுபொருளாக மாறியது. இதன் மூலமாக ஒரு கொடியே 31 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.  

Advertisment

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் வழங்கப்படும் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையில் கூடுதல் தொகையை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில், ‘புதுவை குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. புதுச்சேரி மாநிலத்தில் வாழும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 63,000 குடும்பத் தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகை, குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ2,500 வீதம் அடுத்த இரண்டு மாதங்களுக்குமான நிதியுதவி ரூ.5,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், ‘ஒரு குடும்பத்தின் முன்னேற்றம், அந்த வீட்டின் பெண்களின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் குடும்பத் தலைவிகள் மட்டுமல்ல, இந்த சமூகத்தை வழி நடத்தும் ஆளுமைகள். பெண்களின் பொருளாதார சுதந்திரம் சமூக முன்னேற்றத்தின் அடையாளம்’ என்றும் புதுச்சேரி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி புதுச்சேரி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெண்களிடையே இது குறித்து எதிர்பார்ப்பது அதிகரித்துள்ளது.

Advertisment